கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும்
மா சதிர் இது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா!
ஈசன் என் கருமாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம் பிரான் எம்மான் நாராயணனாலே (1)
Through Nārāyaṇa—our Lord, our Master, sovereign of heaven, my God, my dark jewel, my beautiful red-sceptered Kṛṣṇa—the people above and below who belong to Keśava, and our kin through seven times seven births, have received this great distinction. How our life has come true!
நாரணன் முழு ஏழ் உலகுக்கும் நாதன் வேத மயன்
காரணம் கிரிசை கருமம் இவை முதல்வன் எந்தை
சீர் அணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று
வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான் என் மாதவனே (2)
Nārāyaṇa is Lord of all seven worlds, formed of the Veda: cause, sacred action, deed, and their primordial source—my Father. Śrī, the immortals, and countless others stand worshipping and praising him; he who broke the elephant’s tusk is my Mādhava.
மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது
யாது அவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்து இருந்து
தீது அவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரைக் கண் குன்றம்
கோது அவம் இல் என் கன்னல் கட்டி எம்மான் என் கோவிந்தனே (3)
The instant I said “Mādhava,” he entered and remained within me, declaring, “From now on I will let no affliction approach.” Nectar that destroys evil and futility, red-lotus-eyed mountain, flawless block of sugarcane sweetness—my Lord, my Govinda!
கோவிந்தன் குடக் கூத்தன் கோவலன் என்று என்றே குனித்துத்
தேவும் தன்னையும் பாடி ஆடத் திருத்தி என்னைக் கொண்டு என்
பாவம் தன்னையும் பாறக் கைத்து எமர் ஏழ் எழு பிறப்பும்
மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே (4)
Bending and crying “Govinda! Pot-dancer! Cowherd!”, he set me right to sing and dance of the gods and himself. Taking me, he shattered my sin and made our kin through seven times seven births fit to abide in him—the mighty Lord, Viṣṇu.
விட்டு இலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்
விட்டு இலங்கு கருஞ்சுடர் மலையே திரு உடம்பு
விட்டு இலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி
விட்டு இலங்கு முடி அம்மான் மதுசூதனன் தனக்கே (5)
For Madhusūdana alone: his feet, hands, and eyes are radiant red lotuses; his sacred body, a darkly shining mountain; his glorious conch, the bright moon; his discus, the sun; and his sovereign crown pours light in every direction.
மதுசூதனை அன்றி மற்று இலேன் என்று எத்தாலும் கருமம் இன்றி
துதி சூழ்ந்த பாடல்கள் பாடி ஆட நின்று ஊழி ஊழிதொறும்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரிவிக்கிரமனையே (6)
“I have no one but Madhusūdana.” Free from every other activity, I stand singing praise-filled songs and dancing age after age. Entering every birth before me and granting me grace, destiny has encircled me with my Lord Trivikrama.
திரிவிக்கிரமன் செந்தாமரைக் கண் எம்மான் என் செங்கனி வாய்
உருவில் பொலிந்த வெள்ளைப் பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளி
பரவிப் பணிந்து பல் ஊழி ஊழி நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லைகாண் என் வாமனனே (7)
Thinking again and again, “Trivikrama, my red-lotus-eyed Lord, red-fruit mouth, shining form with crystal-white teeth,” I praise and bow. Mighty Vāmana, you gave me a mind that will join and worship your lotus feet through age upon age.
வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய்ப் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன்? என் சிரீதரனே (8)
Singing and bowing to your feet—“Vāmana, emerald-hued, lotus-eyed, father of Kāma”—I became pure in mind. You ended the turmoil of birth and destroyed my evil intention. My Śrīdhara, what return can I make to you?
சிரீதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்
வெரீஇ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து
மரீஇய தீவினை மாள இன்பம் வளர வைகல் வைகல்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை என் இருடீகேசனே (9)
Day and night my mouth cried, “Śrīdhara, red-lotus-eyed Lord!” I reeled in fear, eyes flooding, breathing hot sigh after sigh. So that clinging evil deeds might die and joy grow each day, you established yourself within me, my Hṛṣīkeśa.
இருடீகேசன் எம் பிரான் இலங்கை அரக்கர் குலம்
முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்று என்று
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து
மருடியேலும் விடேல் கண்டாய் நம்பி பற்பநாபனையே (10)
“Hṛṣīkeśa, our Lord who ended the violence of Laṅkā’s rākṣasa clan; our Master, Master of immortals”—understand him clearly, O heart, and bow with certainty. Even when bewildered, never release the complete Lord Padmanābha.
பற்பநாபன் உயர்வு அற உயரும் பெரும் திறலோன்
எற்பரன் என்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த
கற்பகம் என் அமுதம் கார் முகில் போலும் வேங்கட நல்
வெற்பன் விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே (11)
Padmanābha is of limitless height and surpassing power. Making me wholly his, he gave himself to me: my wish-granting tree, my nectar, cloud-dark Lord of the noble Vēṅkaṭa hill, sovereign of heaven—my Father Dāmodara.
தாமோதரனை தனி முதல்வனை ஞாலம் உண்டவனை
ஆமோ தரம் அறிய ஒருவர்க்கு? என்றே தொழும் அவர்கள்
தாமோதரன் உரு ஆகிய சிவற்கும் திசைமுகற்கும்
ஆமோ தரம் அறிய எம்மானை என் ஆழி வண்ணனையே? (12)
His servants worship, asking, “Can anyone know the measure of Dāmodara, the incomparable First One who swallowed the world?” Can Hara, whose form Dāmodara became, or four-faced Brahmā know the measure of our ocean-hued Lord?
வண்ண மா மணிச் சோதியை அமரர் தலைமகனை
கண்ணனை நெடுமாலைத் தென் குருகூர்ச் சடகோபன்
பண்ணிய தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பன்னிரண்டும்
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு அண்ணல் தாள் அணைவிக்குமே (13)
Śaṭhakopa of southern Kurukūr fashioned a thousand-song Tamil garland for the great jewel-radiance, Kṛṣṇa, the long-reaching Lord and leader of immortals. These twelve hymns of the twelve Names, sung in their mode, bring one to the Master’s feet.