राम
Tiruvāymoḻi
PDF

Book 10 · Decad 3

ஆநிரை மேய்க்கச் சென்றால் பிரிவாற்றி இரோம் என்று போக்கைத் தவிர்க்குமாறு ஆய்ச்சியர் கண்ணனை வேண்டுதல்

Tiruvāymoḻi 10.3 · pāsurams 38053815

வேய் மரு தோள் இணை மெலியும் ஆலோ மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்காக் காமரு குயில்களும் கூவும் ஆலோ கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ தாமரைக் கண்கள்கொண்டு ஈர்தி ஆலோ தகவிலை தகவிலையே நீ கண்ணா (1)

My paired bamboo-like shoulders waste away; neither their wasting nor my loneliness is noticed. Lovely cuckoos keep calling and peacock flocks join in dance. You go to graze the gathering herds; one day becomes a thousand ages. Your lotus eyes cut through me. Kaṇṇan, you have no mercy—no mercy at all.

தகவிலை தகவிலையே நீ கண்ணா தட முலை புணர்தொறும் புணர்ச்சிக்கு ஆராச் சுகவெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்கச் சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே அக உயிர் அகம் அகம்தோறும் உள் புக்கு ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ மிக மிக இனி உன்னைப் பிரிவை ஆமால் வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே (2)

Kaṇṇan, you have no mercy—none. Whenever you join my broad breasts, an insatiable flood of pleasure passes beyond heaven, drowns awareness, surrounds me, then departs there as though a dream. Entering every inner chamber of my life, desire grows beyond what life can bear. Alas, I cannot part from you now; this departure to graze the herds is death.

வீவன் நின் பசு நிரை மேய்க்கப் போக்கு வெவ்வுயிர் கொண்டு எனது ஆவி வேமால் யாவரும் துணை இல்லை யான் இருந்து உன் அஞ்சன மேனியை ஆட்டம் காணேன் போவது அன்று ஒரு பகல் நீ அகன்றால் பொரு கயல் கண் இணை நீரும் நில்லா சாவது இவ் ஆய்க்குலத்து ஆய்ச்சியோமாய்ப் பிறந்த இத் தொழுத்தையோம் தனிமை தானே (3)

I will die when you leave to graze your cattle; taking burning life-breath, my soul blazes. I have no companion here and cannot watch your collyrium-dark body at play. If you depart, even a single day will not pass, and tears will not remain within my paired, battling-fish eyes. Born as cowherd women of this clan, we slaves will die of loneliness.

தொழுத்தையோம் தனிமையும் துணை பிரிந்தார் துயரமும் நினைகிலை கோவிந்தா நின் தொழுத்தனில் பசுக்களையே விரும்பி துறந்து எம்மை இட்டு அவை மேய்க்கப் போதி பழுத்த நல் அமுதின் இன் சாற்று வெள்ளம் பாவியேன் மனம் அகம்தோறும் உள்புக்கு அழுத்த நின் செங்கனி வாயின் கள்வப் பணிமொழி நினைதொறும் ஆவி வேமால் (4)

Govinda, you do not remember the loneliness of us slaves or the suffering of those separated from their companion. Preferring only the cattle in your enclosure, you abandon us and go to graze them. The flood of sweet juice from perfectly ripened nectar enters and presses every chamber of sinful me’s heart. Whenever I recall the thief’s humble words from your red-fruit mouth, my life burns.

பணிமொழி நினைதொறும் ஆவி வேமால் பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா பிணி அவிழ் மல்லிகை வாடை தூவ பெரு மத மாலையும் வந்தின்று ஆலோ மணி மிகு மார்பினில் முல்லைப்போது என் வன முலை கமழ்வித்து உன் வாய் அமுதம் தந்து அணி மிகு தாமரைக் கையை அந்தோ! அடிச்சியோம் தலைமிசை நீ அணியாய் (5)

Whenever I remember your gentle words, my life burns. Kaṇṇan, you went by day to graze the herd; opening jasmine buds pour fragrance, and great maddening evening has now arrived. Let the jasmine at your jewel-rich chest perfume my firm breasts; give the nectar of your mouth, and, alas, adorn the heads of us servants with your beautiful lotus hand.

அடிச்சியோம் தலைமிசை நீ அணியாய் ஆழி அம் கண்ணா உன் கோலப் பாதம் பிடித்து அது நடுவு உனக்கு அரிவையரும் பலர் அது நிற்க எம் பெண்மை ஆற்றோம் வடித்தடம் கண் இணை நீரும் நில்லா மனமும் நில்லா எமக்கு அது தன்னாலே வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே (6)

Adorn the heads of us servants. Discus-eyed Kaṇṇan, let us hold your lovely feet. Though many young women wait in between to do the same, our womanhood cannot endure. Tears never stop in our paired, broad, sculpted eyes, and our minds cannot remain still. Because you leave to graze the herd, life blazes and melts like wax in flame.

வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கு வெள் வளை மேகலை கழன்று வீழ தூ மலர்க் கண் இணை முத்தம் சோர துணை முலை பயந்து என தோள்கள் வாட மா மணி வண்ணா உன் செங்கமல வண்ண மெல் மலர் அடி நோவ நீ போய் ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் ஆங்கே? (7)

Our lives burn and collapse like wax in fire; white bangles and girdles loosen and fall; paired pure flower-eyes shed pearls; companion breasts grow pale and shoulders wither. Great sapphire-hued one, you happily go to graze the cows though your soft red-lotus feet will ache. What if asuras confront you there?

அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் ஆங்கு? என்று ஆழும் என் ஆர் உயிர் ஆன் பின் போகேல் கசிகையும் வேட்கையும் உள்கலந்து கலவியும் நலியும் என் கைகழியேல் வசிசெய் உன் தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக உடையும் காட்டி ஒசிசெய் நுண் இடை இள ஆய்ச்சியர் நீ உகக்கும் நல்லவரொடும் உழிதராயே (8)

“What if asuras confront him there?” My precious life sinks in that thought. Do not follow the cows. Longing and desire mingle within and union itself torments me—do not slip from my hands. Displaying your captivating lotus eyes, mouth, hands, and yellow silk, roam among us young cowherd women with breaking slender waists, together with the good ones you love.

உகக்கும் நல்லவரொடும் உழிதந்து உன் தன் திருவுள்ளம் இடர் கெடும்தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம் எம் பெருமான் பசு மேய்க்கப் போகேல் மிகப் பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு நின்று உழிதருவர் கஞ்சன் ஏவ அகப்படில் அவரொடும் நின்னொடு ஆங்கே அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ (9)

Whenever you wander with the good women you love and the distress in your sacred heart subsides, we marvel and rejoice—yet our womanhood cannot bear it. Our Lord, do not go to graze the cows. At Kaṃsa’s command, many asuras assume whatever forms they desire and roam nearby. If you fall among them, suffering will arise there for them and you. Alas, accept my words.

அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ அசுரர்கள் வன் கையர் கஞ்சன் ஏவ தவத்தவர் மறுக நின்று உழிதருவர் தனிமையும் பெரிது உனக்கு இராமனையும் உவர்த்தலை உடன் திரிகிலையும் என்று என்று ஊடுற என்னுடை ஆவி வேமால் திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே (10)

Suffering will arise—alas, accept my words. Mighty-handed asuras sent by Kaṃsa roam about, making even ascetics tremble; your solitude is great, and you do not take your elder brother with you. Each thought of this estrangement makes my life burn. Red-fruit-mouthed God of our cowherds, you delight in grazing cattle more than in heaven itself.

செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு அத் திருவடி திருவடிமேல் பொருநல் சங்கு அணி துறைவன் வண் தென் குருகூர் வண் சடகோபன் சொல் ஆயிரத்துள் மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலை அவனொடும் பிரிவதற்கு இரங்கி தையல் அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன இவையும் பத்து அவற்றின் சார்வே (11)

Upon the sacred feet of our red-fruit-mouthed cowherd God, generous Caṭakōpa of bountiful southern Kurukūr, lord by the Porunal’s conch-adorned banks, spoke his thousand. These ten are the essence of the garland chosen by cowherd women: the maiden laments separation and speaks to stop him from grazing the herd there.